காற்று
காற்று என்பது வளிமங்கள் பெருமளவில் ஓரிடத்தில்
இருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிக்கும். புவியைப் பொறுத்தவரை, வளிமண்டலத்தில் வளிமம் பெருமளவில் நகரும்போது காற்று எனப்படுகிறது. விண்வெளியில்
சூரியனில் இருந்து வளிமங்கள் அல்லது மின்னேற்றம் அடைந்த துகள்கள் வெளியேறி
வெளிக்குள் செல்வது சூரியக் காற்று எனவும், கோள்களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்களின் வெளியேற்றம் கோள்காற்று எனவும் அழைக்கப்படுகின்றன.
வளிமம் (அல்லது வாயு) என்பது பொருட்களின் நான்கு இயற்பியல் நிலைகளுள் ஒன்று. திண்மம்,
நீர்மம், பிளாஸ்மா என்பனவே ஏனைய மூன்று நிலைகளும் ஆகும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில்
திண்மமாக இருக்கும் பொருள் ஒன்று வெப்பநிலையை கூட்டும்போது ஒரு குறிப்பிட்ட
வெப்பநிலையில் நீர்மமாக மாறும். மேலும் வெப்பநிலையைக் கூட்டினால் இன்னும் கூடிய
ஒரு வெப்பநிலையில் அது வளிம நிலைக்கு மாறும்.
நாம் வாழும் நில உலகில் உள்ள வளிமண்டலத்தில் சற்றேறக் குறைய 78% நைட்ரசன் என்னும்
வளிமமும், 21% உயிர்வளியும் (ஆக்ஸிஜன்) எஞ்சியுள்ள 1% மட்டும் தான் கார்பனீரொட்சைட்டு
போன்ற பிற வளிமங்கள்.