21 November 2017

கோள்க்காற்று (Planatery Wind) ஒருபார்வை



புவியின் மேற்பரப்பில் வீசுகின்ற பெருங்காற்றுத் தொகுதிகள் கோட்காற்றுத்தொகுதிகள் எனப்படுகின்றன. காற்றுகள் எப்பொழுதும் ஒரு உயரழுத்த வளைய த்திலிருந்து தாழ்வழுத்த வளைய த்தை நோக்கி வீசுகின்றன. புவியில் காணப்படுகின்ற ஏழு அழுத்த  வளையங்களுக்கும் அமைய ஆறு காற்றுக்கள் வீசுகின்றன. இந்த ஆறு காற்றுக்களும் பிரதானமாக மூன்று வகைக்குள் அடக்கப்படுகின்றன.
அவையாவன
1.வியாபாரக்காற்று
2.மேலைக்காற்று
3.துருவக்காற்று (முனைவுக் கீழைக்காற்று)
1.வியாபாரக்காற்று
அயன அயல் உயரழுத்த வளையங்களிலிருந்து மத்திய கோட்டுத் தாழ்வழுத்த வளையத்தை நோக்கி வீசுகின்ற காற்றுக்கள் வியாபாரக் காற்றுக்கள் அல்லது தடக்காற்றுக்கள் எனப்படுகின்றன.  வடக்கில் வடகீழ் திசையிலிருந்து வீசும் காற்றினை வடகீழ் வியாபாரக் காற்று எனவும், தெற்கே தென்கீழ் திசையிலிந்து வீசும் காற்றினை தென்கீழ் வியாபாரக் காற்று எனவும் அழைக்கின்றனர்.
2.மேலைக்காற்று
அயன அயல் உயரழுத்த வளையங்களிலிருந்து முனைவுகளின் அயலிலுள்ள தாழ்வழுத்த வளையங்களை நோக்கி வீசுகின்ற காற்றுக்கள் மேலைக் காற்றுக்கள் எனப்படுகின்றன. வடக்கில் தென் மேலைக் காற்றுக்கள் எனவும், தெற்கில் வடமேலைக் காற்றுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
3.துருவக்காற்று (முனைவுக் கீழைக்காற்று)
முனைவிலுள்ள உயரழுத்த வளையங்களிலிருந்து முனைவு அயல் தாழ்வழுத்தவளையத்தை நோக்கி வீசுகின்ற காற்றுக்கள் முனைவுக் கீழைக் காற்றுக்கள் எனப்படுகின்றன. வடக்கில் வடமுனைவுக்கீழைக் காற்று எனவும், தெற்கில் தென்முனைவு கீழைக் காற்று எனவும் அழைக்கப்படுகின்றன.
காற்றுக்கள் வீசும் திசையில் மாற்றங்கள் காணப்படுவதற்கு புவித்திருப்பல் விசை, அழுத்த வேறுபாடுகள், ஈர்ப்பு விசை என்பன காரணமாக அமைகின்றன